எப்போதெல்லாம் தேர்தல் களம் நாட்டில் சூடு பிடிக்கிறதோ, அப்போதெல்லாம் ஒரு வித சூழ்நிலை நாட்டில் உருவாகி கொண்டிருக்க தான் செய்கிறது..... 'பண பட்டுவாடா' என்னும் அந்த சூழ்நிலையை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.... திடீரென்று கோடி கோடியாய் பணம் மக்களின் வாக்குகளை விலை கொடுத்து வாங்குவதற்கு புரள தொடங்கி விடும்.... அத்தகைய பணத்தை நான்கு சராசரி இளைஞர்கள் கொள்ளை அடித்துவிட்டால் நிலைமை எப்படி இருக்கும் என்பதை யதார்த்தமாக உணர்த்த வருகிறது, இயக்குனர் சிகரம் பாலுமகேந்திராவின் சீடர் ஸ்ரீகண்டன் இயக்கி இருக்கும் 'தப்பு தண்டா' திரைப்படம்.
'கிளாப்போர்டு புரொடக்ஷன்' சார்பில் சத்யமூர்த்தி தயாரித்து இருக்கும் 'தப்பு தண்டா' படத்தில் சத்யா - சுவேதா கய் முன்னணி கதாபாத்திரங்களிலும், மைம் கோபி, ஜான் விஜய், அஜய் கோஷ், ஈ ராமதாஸ், மெட்ராஸ் ரவி, மகேந்திரன், நாகா, சஞ்சீவி, அஷ்மிதா பிரியா, ஜீவா ரவி மற்றும் ஆத்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். நகைச்சுவை - கிரைம் கலந்த திகில் திரைப்படமாக உருவெடுத்து இருக்கும் 'தப்பு தண்டா' படத்தில் ஒளிப்பதிவாளர் அ வினோத் பாரதி (நெருங்கி வா முத்தமிடாதே), இசையமைப்பாளர் நரேன் பாலகுமார், படத்தொகுப்பாளர் எஸ் பி ராஜா சேதுபதி (சதுரங்க வேட்டை) மற்றும் கலை இயக்குனர் பி சிவசங்கர் என பல வலுவான தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றி இருப்பது மேலும் சிறப்பு.
"தேர்தல், நான்கு திருடர்கள், கதாநாயகியின் காதல் என மூன்று வெவ்வேறு கதை களங்களை கொண்டு தான் எங்களின் 'தப்பு தண்டா' திரைப்படம் நகரும்....முதல் பாதியை நகைச்சுவையாகவும், இரண்டாம் பாதியை கிரைம் கலந்த திகிலாகவும் நாங்கள் உருவாக்கி இருக்கிறோம்.
எங்கள் தப்பு தண்டா படத்தின் முக்கியமான சிறப்பம்சமே ஜான் விஜய் சாரின் கதாபாத்திரம் தான்.... முதல் முறையாக, திருடர்களுக்கான ஒரு பல்கலைக்கழகத்தின் நிறுவனராக அவர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்.... திருட்டு தொழிலில் இணைய விருப்பப்படும் இளைஞர்களை படி படியாக முழு நேர திருடனாக்குவது தான் அவருடைய கதாபாத்திரத்தின் முக்கியமான குறிக்கோள்..... அதேபோல் அஜய் கோஷ் சாரின் கதாபாத்திரமும் எங்கள் 'தப்பு தண்டா' படத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது....எங்கள் படத்தின் கதை பல்வேறு பரிமாணங்களில் செல்வதற்கு அவருடைய கதாபாத்திரம் தான் பாலமாக செய்லபடும். விசாரணை திரைப்படத்திற்கு பிறகு அவர் நடித்திருக்கும் இந்த கதாபாத்திரம் நிச்சயமாக அணைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்படும்....
கூத்து பட்டறையில் இருந்து உதயமான எங்கள் படத்தின் தயாரிப்பாளர் - ஹீரோ சத்ய்மூர்த்தி, 'தப்பு தண்டா' படத்திற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து இருக்கிறார். மற்ற எல்லா நகைச்சுவை கலந்த திகில் படங்களில் இருந்தும் எங்களின் 'தப்பு தண்டா' திரைப்படம் தனித்து விளங்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது..." என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குனர் ஸ்ரீகண்டன்.