எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சில காவிய படைப்புகளுக்கு இருக்கும் வரவேற்பும், அங்கீகாரமும் குறையவே குறையாது....அதிலும் திரையுலகில், காலத்தால் அழியாத, நட்சத்திர கதநாயகர்கள் நடித்த திரைப்படங்கள் என்றுமே சிறப்பு தான்....அப்படி அனைத்து தரப்பு ரசிகர்களாலும் தேர்ந்தெடுக்கபட்ட ஒரு திரைப்படம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பாட்ஷா'.
எண்ணற்ற முறைகள் பாட்ஷா படத்தை ரசிகர்கள் கண்டிருந்தாலும், இன்றும் அந்த திரைப்படம் சம்பந்தமான வசனங்களையோ, பாடலையோ தொலைக்காட்சியில் எதார்த்தமாக பார்த்து விட்டால், அவர்கள் தங்களை அறியாமலையே அதீத உற்சாகம் அடைகிறார்கள்....அது தான் பல ஆண்டுகளுக்கு முன் வெளியான பாட்ஷா படத்தின் இன்றைய சிறப்பு. தலைவர் ரஜினிகாந்தின் அசாத்திய நடிப்பு, விறு விறுவென நகரும் திரைக்கதை, எவராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத காலம் சென்ற ரகுவரனின் நடிப்பு, நாடி நரம்புகளுக்குள் புகும் தேவாவின் இசை மற்றும் வியக்க வைக்கும் அதிரடி காட்சிகள் ஆகியவை தான் பாட்ஷா படத்தின் சிறப்பிற்கு காரணம் என்பதை எந்தவித சந்தேகமும் இன்றி சொல்லலாம்.
தயாரிப்பு துறையில் வெற்றிகரமாக தங்களின் ஐம்பதாவது வருடத்தை நிறைவு செய்திருக்கும் 'சத்யா மூவீஸ்', அதனை சிறப்பிக்கும் விதமாக தற்போது பாட்ஷா படத்தை, நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேற்றி, 5.1 டிஜிட்டல் ஒலி அமைப்பில் வெளியிட இருக்கின்றது. இந்த நவீன தொழில் நுட்பத்தில் மெருகேறிய பாட்ஷா படத்தின் டிரைலர், கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளியாகி, சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது. தினந்தோறும் சராசரியாக ஒரு லட்சம் பார்வையாளர்கள், இந்த டிரைலரை 'யுடியூப்பில்' கண்டுள்ளார்கள்.
"எதிரிபார்த்ததை விட பல மடங்கு அதிகமான வரவேற்பை நாங்கள் பெற்று இருக்கிறோம்...நான்கு மூலைகளில் இருந்தும் எங்களுக்கு கிடைக்கும் ஆதரவையும், வரவேற்பையும் பார்க்கும் பொழுது, அளவு கடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேறி இருக்கும் பாட்ஷா படத்தின் டிரைலர் வெளியான சில நிமிடங்களிலேயே, சமூக வலைத்தளங்களில் #EpicBaasha என்ற ட்ரெண்டிங் மொழியோடு, முன்னிலை வகிக்க ஆரம்பித்து விட்டது. அலைக்கடலென திரளும் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி, வர்த்தக உலகிலும் அமோக வரவேற்பை எந்த டிரைலர் மூலம் நாங்கள் பெற்று இருக்கிறோம்...ஜப்பான் நாட்டு ரசிகர்கள் எப்போதுமே தலைவர் ரஜினிகாந்தின் திரைப்படங்களை திருவிழா போல் கொண்டாடுவார்கள்....அந்த வகையில் அவர்கள் இந்த டிரைலருக்கு அளித்த ஆதரவை வெறும் வார்த்தைகளால் சொல்ல இயலாது....அவர்கள் ஏற்கனவே சென்னையில் நடைபெற இருக்கும் பிரம்மாண்ட பிரத்யேக காட்சிக்கு வர முடிவு செய்துவிட்டார்கள்.... அதுமட்டுமின்றி, அவர்கள் ரஜினிகாந்த்தை நேரில் சந்திக்கவும் இருக்கிறார்கள்....டிஜிட்டல் பதிப்பில் உருவாகி இருக்கும் 'பாட்ஷா' படத்தை ஜப்பான் நாட்டில் வெளியிடுகிறது 'ஸ்பேஸ் பாக்ஸ் ஜப்பான்' நிறுவனம். தற்போது படத்தின் வசனங்களை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்கும் (SUBTITLE) பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது....ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஸ்வீடன் மற்றும் இன்னும் சில நாடுகளில் இருந்தும் எங்களின் டிஜிட்டல் பாஷாவிற்கு, வர்த்தக ரீதியாக நல்லதொரு வரவேற்பு கிடைத்து வருகிறது...." என்று சத்யா மூவிஸ் சார்பில் கூறப்பட்டிருக்கிறது.
விநியோகம் முழுவதுமாக முடிந்த பின், வருகின்ற 2017 - ஜனவரி மாதத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.