கேரளாவில் பிறந்து தமிழ் நாட்டுக்கு வந்து திரை உலகில் கோலோச்சும் நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துக் கேடே தான் வருகிறது. நயன்தாராவில் ஆரம்பித்து தற்போது மலர்ந்து வரும் கதாநாயகிகளான மஞ்சிமா மோகன், மடோனா செபாஸ்டியன் வரை பெரும்பாலானோர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்கள் தான். தற்போது அந்த வரிசையில் இணைய தயாராகி வருகிறார் மிஸ் குயின் (கேரளா) பட்டம் பெற்ற அர்ச்சனா ரவி. 19 வயதான அர்ச்சனா ரவிக்கு கலகலவென பேசுவதும், நடனமும் தான் மிகவும் பிடித்தமான செயல்கள். "எனக்கு பேசுவது என்றால் ரொம்பவும் பிடிக்கும். அதன் காரணமாகவோ என்னவோ, நான் எனது பள்ளி பருவத்திலேயே தொகுப்பாளராக உருவெடுத்துவிட்டேன். அதன் பின் மாடலிங் துறையில் நுழைந்து தற்போது சில விளம்பர படங்களில் நடித்து வருகிறேன். இந்த மாடலிங் துறையில் ஒவ்வொரு நாளும் புதுபுது அனுபவங்களை நான் கற்று கொண்டு வருகிறேன்" என்று கூறி மெல்லிய புன்னகையுடன் துவங்குகிறார் அர்ச்சனா.
இவ்வளவு இளம் வயதிலேயே மிஸ் குயின் (கேரளா) என்னும் பட்டத்தை தட்டி சென்ற பெருமை அர்ச்சனாவையே சாரும். அதுமட்டுமின்றி தென் இந்தியாவிற்கான அழகி போட்டியிலும், சிறந்த அழகிய முகத்திற்கான போட்டியிலும், சிறந்த உடல் அழகி மற்றும் 2016 ஆம் ஆண்டிற்கான மிஸ் பெர்சனாலட்டி போட்டியிலும் இரண்டாம் இடத்தை பிடித்திருப்பவர் அர்ச்சனா ரவி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பல விருதுகளை தனது சொத்துக்களாக வாங்கி குவித்துள்ள அர்ச்சனாவை பொறுத்தவரை நடிப்பு என்பது இறைவன் கொடுத்த வரம். "நடிப்பு என்பது ஒரு கலை. அந்த கலையை நான் எங்கும் சென்றும் பயிலவில்லை. மாறாக என் மீது முழு நம்பிக்கை வைத்து தான் கேமரா முன் தோன்றுவேன். நடிப்பு மட்டும் தான் என்னுடைய மிக பெரிய கனவாக பல காலமாக இருந்து வருகிறது. எனக்கு சில பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தாலும், சரியான கதை களத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்" என்று நம்பிகையுடன் கூறுகிறார் அர்ச்சனா. ஜெர்மனியிலும், சீனாவிலும் நடைப்பெற உள்ள நம்பர் 1 மாடல் போட்டிக்கு அர்ச்சனா தயாராகி வருவது மேலும் சிறப்பு.
பரதநாட்டியத்தில் தேர்ச்சி பெற்று உள்ள அர்ச்சனாவிற்கு, இயக்குனர் கௌதம் மேனனின் திரைப்படங்கள் மீது தனி மரியாதை உண்டு. "தமிழ் சினிமாவில் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு இயக்குனர், காதல் என்ற வார்த்தைக்கு உயிர் கொடுக்கும் கௌதம் மேனன் தான். காதலை மையமாக கொண்டு அவர் உருவாக்கியுள்ள படங்கள் யாவும் மிக எதார்த்தமாகவும், நெஞ்சை உரசி செல்ல கூடியதாகவும் இருக்கும்" என்கிறார் அர்ச்சனா. அதுமட்டுமில்லாமல் நடிகர் தனுஷின் நடிப்பு நுணுக்கங்கள் அவரை பல தருணங்களில் ஆச்சரியப்பட செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. "நான் தனுஷின் மிகப்பெரிய ரசிகை. ஒவ்வொரு படங்களிலும் ஒவ்வொரு கதாப்பாத்திரங்கள் என கலைக்கே புது அர்த்தத்தை அவர் ஏற்படுத்தி வருகிறார். உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் அவரின் சில காட்சிகளை பார்த்து தான் நான் என்னுடைய நடிக்கும் திறனை வளர்த்து வருகிறேன்" என்று புன்னகையுடன் கூறுகிறார் அர்ச்சனா. "எந்த ஒரு கதாப்பாத்திரமாய் இருந்தாலும் சரி. திரைப்படம் முடிந்து ரசிகர்கள் வீட்டுக்கு சென்றாலும் அந்த கதாப்பாத்திரமானது அவர்களின் நினைவில் இருந்து அழியக் கூடாது. அப்படிப்பட்ட வேடங்களில் நடிக்க தான் நான் காத்துக் கொண்டிருக்கிறேன். அதை தவிர நாட்டியம் ஆடும் பெண்மணியாகவும், காதல் கதைகளில் மனதை வருடிச் செல்லும் கதாப்பாத்திரமாகவும் நடிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கனவு வேடங்கள்." என்கிறார் அர்ச்சனா.
தனது அம்மாவை முன்மாதிரியாக கருதும் அர்ச்சனா கூறுகையில், "ஒவ்வொரு முறையும் நான் தடுமாறி கீழே விழும்பொழுது, என்னை தாங்கி பிடிக்கும் என் அம்மா தான் எனக்கு பெஸ்ட்" என்று கூறி விடை பெறுகிறார் அழகும் அறிவும் ஒருங்கே இணைந்த அர்ச்சனா ரவி.
No comments:
Post a Comment