ஒருபுறம், தன்னுடைய துள்ளலான இசையால் இள வட்டாரங்களை தன் பிடியில் வைத்திருக்கும் இசையமைப்பாளர் அனிரூத்.... மறுபுறம் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்படும் நடிகர் - பாடகர் சிலம்பரசன். இவர்கள் இருவரும் ஒரு பாடலுக்கு இணைந்தால், நிச்சயமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு அளவே இருக்காது...அப்படிப்பட்ட ஒரு பாடலாக உருவாகி இருப்பது தான் அனிரூத் இசையில் சிலம்பரசன் பாடியிருக்கும் 'ரம்' திரைப்படத்தின் 'பேயோபோபிலியா' பாடல். பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் உதயமாகியுள்ள இந்த 'பேயோபோபிலியா' பாடலானது, ஒரு வீட்டில் நடக்கும் அமானுஷிய நிகழ்வுகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 'ஆல் இன் பிச்சர்ஸ்' விஜய ராகவேந்திரா தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சாய் பரத் இயக்கி இருக்கும் 'ரம்' படத்தில் ஹ்ரிஷிகேஷ், சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ், விவேக், நரேன், அம்ஜத் மற்றும் அர்ஜுன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர்.
"ஜிப்ரிஷ்' எனப்படும் முழுமையான அர்த்தம் பெறாத மொழியில் இந்த பாடலை உருவாக்க நாங்கள் திட்டமிட்டிருந்தோம். அதற்கேற்ப சிறப்பான முறையில் பாடல் வரிகளை எழுதியுள்ளார் பாடலாசிரியர் விவேக்... 'பேயோபோபிலியா' பாடலுக்கு நான் இசையமைத்து கொண்டிருக்கும் போதே சிலம்பரசன் தான் இந்த பாடலை பாட வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டேன்...அவரின் குரலில் 'பேயோபோபிலியா' பாடலானது உதயமானால், அது நிச்சயம் சிறப்பாக இருக்கும்... பேய்களுக்கு நாம் பயப்பட வேண்டுமா, வேண்டாமா என்பதை மையமாக கொண்டு தொடங்கும் 'பேயோபோபிலியா' பாடல், பேய்களை விட நாம் வாழுகின்ற இந்த உலகம் அதி பயங்கரமானது என்கின்ற கருத்தை முன் நிறுத்தும்... மற்ற எல்லா பாடல்களில் இருந்தும் 'பேயோபோபிலியா' பாடல் தனித்து விளங்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது...' என்று கூறுகிறார் 'ரம்' திரைப்படத்தின் இசையமைப்பாளர் அனிரூத்.
No comments:
Post a Comment