Friday, 8 January 2016

Actor Sivakumar and kamparamayanattai Mahabharata 'Kamban my boyfriend "news and pictures about the audio CD

கம்பராமாயணத்தை 'கம்பன் என் காதலன்' என்கிற பெயரில் நடிகர் சிவகுமார்  பேருரை நிகழ்த்தி அது ஆடியோ சிடியாக விற்பனையில் சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து இப்போது  'மகாபாரதம்' தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு அதையும் இரண்டு மணிநேரப் பேருரையாக ஒரு கல்லூரியில் நிகழ்த்தியிருக்கிறார். அந்த உரை விஜய் டிவியில் வரும் 16. ஆம் தேதி மாட்டுப் பொங்கலன்று மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இது சிடி வடிவிலும் வரவுள்ளது.
இந்த வயதிலும் எப்படி உங்களுக்கு இந்த நினைவாற்றல் சாத்தியம் ஆகி இருக்கிறது? 
இந்த வயது என்றால் என்ன அர்த்தம்? எனக்கு வயது  74 கடந்து 75--ஐத்  தொட்டுக் கொண்டு இருக்கிறேன். நான் என்னை செவன்டீஸில் இருப்பதாக நினைப்பதில்லை. செவன்டீனில் இருப்பதாகவே நினைக்கிறேன்.
சரி இதற்கான பயிற்சி எப்படி கைவரப் பெற்றீர்கள்?
நான்10 வயது பையனாக இருந்த போதே சின்ன வயதிருந்தே இந்தப் பயிற்சி   எனக்கு உண்டு. அந்தக் காலத்து 'பராசக்தி' ,'மனோகரா', 'இல்லற ஜோதி'  போன்ற படங்களின் வசனங்கள் சிறுசிறு புத்தகங்களாக வரும். அப்போதே எட்டணா கொடுத்து வாங்கி முழுதாகப் படித்து  கூடப்படிக்கும் பையன்களிடம் 2 மணி நேரம்  சொல்லியிருக்கிறேன். அந்தப் பயிற்சி எனக்கு அப்போதிலிருந்தே உண்டு.
இந்த பேருரை முயற்சி எப்படி உருவானது?
நான் சென்னைக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஓவியம் ,பயிற்சி என்று 7 ஆண்டுகள் ஓடிவிட்டன.நடிகனாக சினிமா, நாடகம், டிவி என்று 40 ஆண்டுகள் போய்விட்டன.  இது போதும் என்று முடிவெடுத்த பிறகு மேடைப் பேச்சு பக்கம் தாவினேன். நான் பெரிய பேச்சாளன் இல்லை. அடுக்கு மொழி கவர்ச்சி நடை என்றெல்லாம் என்னால் பேசமுடியாது.
அப்போதுதான் இப்படி தலைப்பு வைத்து உரையாற்றினேன். இப்படி இதுவரை 16 உரைகள் ஆற்றி விட்டேன் அவற்றில் 15  உரைகள் ஒளிபரப்பாகி விட்டன. அந்த உரைகளில் கம்பராமாயணம். மகாபாரதம் உரைகள் வேறுபட்ட அனுபவங்கள்.
கம்பராமாயண அனுபவம் எப்படி?
கம்பராமாயணத்தில் வால்மீகி ராமாயணம்வேறு ; கம்பராமாயணம்வேறு .கம்பராமாயணம் உலகம் முழுக்கப் பாராட்டப் படுவது. இதைப்பற்றி எவ்வளவோ பேர் எவ்வளவோ விதமாக பேசியிருக்கிறார்கள். ஒரு முறை என்னைக் கம்பன் கழகத்தினர் .கம்பராமாயணம் பற்றிப் பேசக் கேட்ட போது முதலில் எனக்கு மிரட்சியாகத்தான் இருந்தது. பல நூல்களைப் படித்தேன். உரைகளைக் கேட்டேன்.  பேராசிரியர் சாலமன் பாப்பையா போன்று ராமாயண  உரையாற்றுபவர்களிடம் பேசினேன். எனக்கு ஒன்று புலப்பட்டது. பலரும் மணிக்கணக்காகப் பேசுகிறார்கள். ஆனால் கம்பனின் பாடலைக் குறைவாகவே பயன்படுத்துகிறார்கள் என்பது புரிந்தது. நாம் கம்பனின் பாடலைஅதிகமாகப் பயன் படுத்துவோமே என்று முடிவெடுத்து முதலில் 9 பாடல்களில் தொடங்கி பின்னர் 50, பிறகு 100 பாடல்கள் என்று முடிவுசெய்து செயலில் இறங்கினேன். கம்ப ராமாயணத்தில் 10,520 பாடல்கள்இருக்கின்றன. ஒவ்வொன்றையும் படிக்க ஆரம்பித்தாலோ புரியாது. அவ்வளவு கடின நடையாக இருந்தது. அவற்றில் முழுக்கதையும் வருமாறு 100 பாடல் களைத் தேர்வு செய்து கோர்த்து தயாரித்துப் பேசினேன்.இதன் சிடியே ஒருலட்சம் தாண்டி விற்றது.பலரும் அதைப் பாராட்டவே பிறகு இந்த மகாபாரத முயற்சியில் இறங்கினேன்.பலரும்  இதைப்பெரிய விஷயமாகப் பாராட்டும் போது நான் நினைப்பது இதுதான் இது சாதனை ஒன்றுமில்லை. நான் முழு மனிதன் இல்லை என்னிடமும் குறைகள் உள்ளன.
'மகாபாரதம்' உரையின்  முன் தயாரிப்பு அனுபவம் எப்படி இருந்தது?
'கம்பராமாயணம்' இந்தியப் பெருங்கடல் போன்றது என்றால் 'மகாபாரதம்' பசிபிக் பெருங்கடல் போன்றது. கம்பராமாயணத்தை இரண்டே வரியில்கூட சொல்ல முடியும் மகாபாரதத்தை அப்படிச் சொல்ல முடியாது.அதில்  ஏராளமான கதாபாத்திரங்கள்,   ஏராளமான கிளைக்கதைகள் உண்டு. மகாபாரதத்துக்கு தமிழில் உள்ள நூல்கள் பெரியவை. ராஜாஜி எழுதிய வியாசர் விருந்து, வில்லிப்புத்தூரார் எழுதியது, சோ எழுதிய மகாபாராதம் பேசுகிறது. போன்றவை அளவில் பெரியவை.
அந்த நூல்கள் பல ஆயிரம் பக்கங்களில் இருந்தன.மகாபாரதம்'பற்றி உரை நிகழ்த்தி வருபவர் பேராசிரியர் இளம்பிறை மணிமாறன். அவர் மணிக்கணக்கில் பேசக் கூடியவர் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் ஆற்றல் கொண்டவர். அவர் பேசிய 10--12 நிகழ்ச்சிகளில் சிடிகளைக் கேட்டேன். பி.ஆர்.சோப்ராவின் 'மகாபாரதம்' டிவி தொடர்   இரண்டு ஆண்டுகள் ஒளிபரப்பானவை. பலஅத்தியாயங்கள் கொண்டவை. சுமார் 70 மணிநேர ம் ஓடும்  கேசட்டுகளை வாங்கிக் குறிப்பெடுத்தேன் .இந்த முயற்சியில் இளம்பிறை மணிமாறனை வழிகாட்டியாகக் கொண்டேன். இது அப்படிக் குறிப்பெடுத்து தயாரிக்கப்பட்ட உரை .இதை பாமரனுக்கும் புரியும் வகையில்தான் பேசினேன்.
பேசும் முன் ஒத்திகை மாதிரி யாரிடமாவது பேசிக் காட்டினீர்களா?
நான் நடைப் பயிற்சி போகும் போது இதைப் பலரிடம் பேசிக்காட்ட முயன்றிருக்கிறேன். பாதி பாதி பேசிக் காட்டியிருக்கிறேன்.  நான் ஆரம்பித்ததும் பலரை  தலைதெறிக்க ஓட விட்டிருக்கிறேன். இருந்தாலும்  சில பேராசிரியர்கள் உள்பட சிலரிடம் முழுதாகப் பேசிக் காட்டியுள்ளேன். .
கடைசிவரை சீராகத் தங்குதடையின்றி பேசிய நீங்கள், கடைசியில் மட்டும் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கியது ஏன்?
பேசி முடிக்கப் போகிறோம் என்கிற மகிழ்ச்சியில் வெளிப்பட்ட ஆனந்தக் கண்ணீர் அது. முழுக்கிணறு தாண்டி முடிக்கப் போகிறோம். என்கிற திருப்தியில் வெளிப்பட்ட கண்ணீர் அது.
கற்றறிந்தோர் சபையில் உரையாற்றும் போது பயம்,பதற்றம் வரவில்லையா?
எனக்கு முன்னே உட்கார்ந்திருந்தவர்கள் தமிழருவி மணியன்,பிரபஞ்சன் போன்றஅதிகம்  படித்தவர்கள். அப்போது பதற்றமாகத்தான் இருந்தது. ஆனால் பயந்தால் வேலைக்கு ஆகாது இவர்கள் முன் பேசவேண்டும் என்றால் எதிரே இருப்பவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் என்கிற எண்ணம் வர வேண்டும். அந்த நம்பிக்கையோடுதான் பேசினேன்.
சிறிதும் இடைவெளி விடாமல் பேச முடிவு செய்தது ஏன்?
இடைவெளி விட்டால் கவனம் சிதறிவிடும் என்பது முதல் காரணம்  , பேசிக்கொண்டு இருக்கும் போது மைக்கில் ஏதாவது இடர்பாடு ஏற்பட்டாலோ அல்லது லைட் ஏதாவது அணைந்து கவனத்தை சிதறடித்துவிட்டாலோ நிச்சயம் நான் சொதப்ப வாய்ப்பிருக்கிறது. நான் படித்து வைத்திருந்தது அனைத்தும் என்னுடைய மூளையில்  ஸ்க்ரால் போல் ஓடிக்கொண்டு இருந்ததது , அது தான் நான் இடைவிடாமல் பேச ஏதுவாக ,துணையாக இருந்தது. நான் சில இடங்களில் உணர்ச்சிகரமாக குரலுயர்த்தி பேசி முடிக்கும் போது  " என்னுடைய தொண்டையில் உள்ள நரம்புகள் வெடிக்க போகிறது" என்று நினைத்தது உண்டு. அவ்வாறு நினைத்ததோடு சரி அப்படி எதுவும் நிகழவே இல்லை. அவ்வாறு ஏதும் நிகழாமல் போனதுக்கு காரணம் யோசித்தபோது தான் " நான் பல வருடங்களாக யோகாசனம் செய்து வருவது  எனக்கு நியாபகம் வந்தது.".  நான் எவ்வித இடைஞ்சல்களும் இல்லாமல் இடைவிடாமல் பேசியதற்கு யோகாசனமும் ஒரு காரணம் என்பது மறுக்க இயலாத உண்மை .அதுபோக  நான் காபி மற்றும் டீ போன்றவற்றை குடித்து பல வருடங்கள் ஆகிறது. நான் கடைசியாக 1957ல் தேனீர் பருகுவதை விட்டதாக நியாபகம். ஒரு மனிதனை "நல்லவன்" என்று கூறுவதற்கு அவனுடைய குணநலங்கள் மட்டும் போதாது , அவன் கடைபிடிக்கும் பழக்கவழக்கங்களும் மிக முக்கியமானது.  தங்களுடைய 70 வயதிலேயே என்னுடன் பணியாற்றிய மிகப்பெரிய ஜாம்பாவான்கள் மறைந்த போதும் எளிவனான 75வயதாகியும் இன்னும் சுறுசுறுப்புடன் பணியாற்றுவதற்கும் , நியாபக ஆற்றலோடு இடைவிடாமல் பேசுவதற்கும் முக்கிய காரணம் நான் கடைபிடித்த பழக்கங்கள் தான் காரணம் என்றார்.


No comments:

Post a Comment