சினிமா வரலாற்றில் புதியதொரு சாதனையை படைக்க சிங்கப்பூரை நோக்கி தரை வழியே காரில் பயணித்து கொண்டிருக்கின்றனர், 'சென்னை 2 சிங்கப்பூர்' படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் குழுவினர். கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடிகர் சூர்யா கொடி அசைத்து ஆரம்பித்து வைத்த இந்த நெடுந்தூர 'சென்னை 2 சிங்கப்பூர்' பயணமானது ஏறக்குறைய பதினொன்று நாட்களுக்கு பிறகு தற்போது பூட்டானை கடந்துள்ளது.
அவர்கள் திட்டத்தின் படி தங்கள் 'சென்னை 2 சிங்கப்பூர்' படத்தின் 'போடா..." எனப்படும் இரண்டாவது பாடலை பூட்டானில் வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்.ஜே.பாலாஜி, அபிஷேக்கின் குரலில் உருவாகி இருக்கும் இந்த 'போடா...' பாடலுக்கு சிக்காந்தர் மற்றும் அன்புகனி ஆகியோர் வரிகள் எழுதி இருப்பது மேலும் சிறப்பு.
பூட்டானின் எல்லை பகுதி ஆரம்பமானதும், அந்த நாட்டின் பாதுகாப்பு அதிகாரி ஜிப்ரானையும் அவரது குழுவினரையும் மேற்கொண்டு பயணிக்க அனுமதிக்கவில்லை. மற்றொரு நாட்டிற்கு சாலை வழியே பயணிக்க தேவையான ஒரு முக்கியமான ஆவணத்தை 'சென்னை 2 சிங்கப்பூர்' குழுவினர் எடுத்து செல்லாததே அதற்கு காரணம்.
"நிச்சயமாக அந்த தருணத்தில் எங்கள் அனைவருக்கும் என்ன செய்வது என்றெ தெரியவில்லை...புதிய ஊர், புதிய மொழி என்பதால் எங்களுக்கு பிரச்சனை தான் என்று நினைத்தோம். ஆனால் நான் கமல் சாரின் 'விஸ்வரூபம்', 'உத்தம வில்லன்', 'பாபநாசம்' மற்றும் 'தூங்காவனம்' படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்த தகவல் தெரிந்த அடுத்த கணமே, அவர்களின் முகத்தில் ஒருவித மகிழ்ச்சியை நாங்கள் பார்த்தோம். அதன் பிறகு அந்த பாதுகாப்பு அதிகாரிகளோடு நாங்கள் அமர்ந்து தேநீர் அருந்தி கொண்டு இருக்க, சூப்பர்ஸ்டாரின் 'கபாலி' படத்தை பற்றி அவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு பேச ஆரம்பித்து விட்டனர். கபாலி படத்தில் சூப்பர்ஸ்டாரின் ஸ்டைலான நடிப்பை உற்சாகத்துடன் புகழ்ந்த அந்த அதிகாரிகள், அதன் பின் எங்கள் சென்னை 2 சிங்கப்பூர் படத்தின் பாடல்களையும் கேட்டு ரசித்தது மட்டுமில்லாமல் தங்களின் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருந்தது...நம் தமிழ் சினிமாவின் புகழ் உலகின் இந்த எல்லை வரை பரவி கிடப்பதை பார்க்கும் போது நாங்கள் ஒவ்வொருவரும் பெருமை கொள்கிறோம்...." என்று கூறுகிறார் சென்னை 2 சிங்கப்பூர் படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான்.
தற்போது 'சென்னை 2 சிங்கப்பூர்' படத்தின் மூன்றாவது பாடலை வெளியிட மியான்மார் நோக்கி பயணித்து கொண்டிருக்கின்றனர் ஜிப்ரான் மற்றும் குழுவினர்.
No comments:
Post a Comment