அடுத்த தெருவில் இருக்கும் கடைக்கு செல்ல வேண்டுமென்றால் இரு சக்கர வாகனம்..., நூறடி தொலைவில் இருக்கும் ஆலயத்திற்கு செல்ல வேண்டுமென்றால் நான்கு சக்கர வாகனம்...இப்படி தான் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தராமல் நாம் இன்றைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த கணினி உலகிலும், சென்னையை சார்ந்த 86 வயதான பெண்மணி ஒருவர், உலகளவில் நடைபெற இருக்கும் தடகள போட்டியில் கலந்து கொள்ள இருப்பது, நம்மை உடல் ஆரோக்கியத்தை பற்றி சிந்திக்க வைக்கிறது...
'சென்னை மாவட்ட மூத்தோர் தடகள கழகம்' சார்பில் செண்பக மூர்த்தி (தலைவர்), ருக்மணி தேவி (பொருளாளர் - சிறந்த 'தடியூன்றி தாண்டுதல்' வீராங்கனை) மற்றும் சசிகலா (செயலாளர்) ஆகியோரால் 14 ஆம் முறை நடத்தப்பட்ட தடகள போட்டியானது, நேற்று சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. 100 மீட்டர், 200 மீட்டர் என ஆரம்பித்து 10000 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், வட்டம் எறிதல், 5 கிலோமீட்டர் நடக்கும் போட்டி என நடைபெற்ற வெவ்வேறு போட்டிகளில் 35 வயதை கடந்த ஆண்களும், பெண்களும் மிகுந்த ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். இந்த மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் அனைவரும் தேசிய மற்றும் உலகளவில் நடைபெற இருக்கும் தடகள போட்டியில் கலந்த கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.
டெய்சி விக்டர் என்கின்ற 86 வயதான பெண்மணி ஒருவர் 100 மீட்டர் ஓட்ட பந்தயத்திலும், நீளம் தாண்டுதல் மற்றும் மும்முறை தாண்டுதல் போட்டியிலும் வெற்றி பெற்று, விரைவில் ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் உலகளவில் நடைபெற இருக்கும் தடகள போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார். "35 வயதில் தான் மனிதனுக்கு சர்க்கரை நோயும், மன அழுத்தமும் உண்டாகுகிறது. ஆனால் முறையான உடற் பயிற்சி மூலம் அவற்றில் இருந்து நாம் நம்மை எளிதாக பாதுகாத்து கொள்ளலாம். 35 வயதில் இருந்து 100 வயது வரை உள்ள ஆண்களும் பெண்களும் பங்கேற்ற இந்த போட்டியில், 86 வயதானாலும் சிறந்த ஆற்றலோடு திகழும் டெய்சி விக்டர் உலகளவில் நடைபெற இருக்கும் தடகள போட்டிக்கு முன்னேறி இருப்பது, எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கின்றது. அவர்களை போல் இன்னும் பல திறமையான வீரர்களை வெளி கொண்டு வருவது தான் எங்களின் முக்கிய குறிக்கோள்...நிச்சயமாக அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம்...." என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் 'சென்னை மாவட்ட மூத்தோர் தடகள கழகத்தின்' தலைவர் செண்பக மூர்த்தி.
No comments:
Post a Comment