நெஞ்சை உறைய வைக்கும் ஒரு முழு நீள திகில் படத்தை தமிழ் சினிமா கண்டு வெகு நாட்களாகிவிட்டது. அந்த நீண்ட கால எதிர்பார்ப்புக்கு பலனாக தற்போது அமைந்திருப்பது தான் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாக இருக்கும் 'பயம் ஒரு பயணம்' திரைப்படம். நேற்று திரையிடப்பட்ட இந்த பயம் ஒரு பயணம் படத்தின் 20 நிமிட சிறப்பு காட்சி தொகுப்பே அதற்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறது. தமிழ் சினிமா வரலாற்றில், ஒரு படம் வெளியாவதற்கு முன்னதாகவே அதன் குறிப்பிட்ட சில காட்சிகளை திரையிடுவது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் இதுவரை எவரும் செய்யாத முயற்சியை பயம் ஒரு பயணம் படக்குழுவினர் கையாண்டு இருக்கின்றனர் என்பதை உறுதியாகவே சொல்லலாம். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மூத்த தயாரிப்பாளரும், தென் இந்திய பிலிம் சேம்பர் ஆப் காமர்ஸின் தலைவருமான சி கல்யாண், புகழ் பெற்ற திகில் பட இயக்குனர் 'யார்' கண்ணன், தயாரிப்பாளர் கணேஷ் (ரெக்க), இயக்குனர் சாம் ஆண்டன், இயக்குனர் ராம்பாலா, காட்றகட்ட பிரசாத், ரவி கொட்டாரக்காரா மற்றும் பயம் ஒரு பயணம் படத்தின் தயாரிப்பாளர்கள் துரை மற்றும் சண்முகம் (ஆக்ட்டோஸ்பைடர் புரொடக்ஷன்), இயக்குனர் மணிஷர்மா, கதாநாயகன் டாக்டர் பரத், முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் மீனாக்ஷி தீட்சித், ஒளிப்பதிவாளர் ஆண்ட்ரூ, இசையமைப்பாளர் ஒய் ஆர் பிரசாத், படத்தொகுப்பாளர் எல் வி கே தாஸ், கலை இயக்குனர் கார்த்திக் ராஜ்குமார் மற்றும் சவுண்ட் என்ஜினீயர் துக்காராம் ஆகியோர் பங்கு பெற்றனர்.
"தமிழ் சினிமா வரலாற்றில் அடுத்த ஒரு 'யார்' திரைப்படமாக அமைய இருக்கும் படம் 'பயம் ஒரு பயணம்' தான் என்பதை நான் உறுதியாக சொல்லி கொள்கிறேன் " என்று கூறினார் இயக்குனர் 'யார்' கண்ணன்.
"பயம் ஒரு பயணம் படத்தின் சிறப்பு காட்சி தொகுப்பை நான் காண்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். இந்த இருபது நிமிட காட்சி தொகுப்பே இப்படி ஒரு பயம் கலந்த திகில் அனுபவத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது என்றால், முழு படமும் எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள். நிச்சயமாக பயம் ஒரு பயணம் படத்தை பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் திரையரங்கில் பயத்தால் அலற போகிறார்கள்..." என்று கூறினார் 'தில்லுக்கு துட்டு' பட இயக்குனர் ராம்பாலா.
"பின்னணி இசை, ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு ஆகிய மூன்றும் தான் ஒரு திகில் படத்திற்கு தேவையான மூன்று முக்கிய அம்சங்கள். அந்த மூன்று அம்சங்களும் பயம் ஒரு பயணம் படத்தில் கனகச்சிதமாக பொருந்தி இருக்கிறது. இதற்காக உழைத்த ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்..." என்று கூறினார் 'டார்லிங்' பட இயக்குனர் சாம் ஆண்டன்.
"விஜய் சேதுபதி நடித்த 'பீட்ஸா' படத்திற்கு முன்பு நான் இந்த பயம் ஒரு பயணம் படத்தின் கதையை எழுதினேன். ஆனால் ஒரு வருடத்திற்கு முன்பு தான் அந்த கதையின் மூலம் நான் முழு திருப்தி அடைந்தேன்...தற்போதைய காலத்தில் உள்ள திகில் படங்கள் எல்லாம், திகில் என்ற மைய கருத்தை விட்டுவிட்டு வேறொரு பாதையில் பயணிக்கிறது...எங்களின் பயம் ஒரு பயணம் திரைப்படம் அப்படி இல்லாமல் முழுக்க முழுக்க ஒரு திகில் படமாக மட்டும் தான் இருக்கும். பொதுவாகவே மூன்று பரிமாணத்திற்குள் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.. ஆனால் எங்களின் பயம் ஒரு பயணம் திரைப்படமானது ரசிகர்களை நான்காவது பரிமாணத்திற்குள் பயணிக்க செய்யும்...' என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் பயம் ஒரு பயணம் படத்தின் இயக்குனர் மணிஷர்மா.
தயாரிப்பு துறையில் பயம் ஒரு பயணம் படம் மூலம் அடியெடுத்து வைக்கும் இளம் தயாரிப்பாளர்கள் துரை மற்றும் சண்முகம் கூறுகையில், "வெறும் பயம் மட்டும் எங்கள் படத்தில் இல்லை..அதையும் தாண்டி ஒருவித முக்கிய சிறப்பம்சத்தை நாங்கள் பயம் ஒரு பயணம் படத்தில் உள்ளடக்கி இருக்கிறோம்...படம் பார்த்த பிறகு அதை ரசிகர்கள் உணருவர்..." என்றனர்.
"ஒருபுறம் இயக்குனர் மணிஷர்மா பயம் ஒரு பயணம் படத்திற்கு தந்தையாக செயல்பட, இந்த படத்திற்கு உயிர் கொடுத்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆண்ட்ரூ. ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாக இருக்கும் பயம் ஒரு பயணம் படமானது நிச்சயமாக ரசிகர்களின் பாராட்டுகளையும் மட்டுமின்றி சினிமா விமர்சகர்களின் பாராட்டுகளையும் ஒருசேர பெரும்...வெற்றி பாதையில் பயணிக்க இருக்கும் ஒட்டுமொத்த பயம் ஒரு பயணம் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்..." என்று மகிழ்ச்சியுடன் கூறினார் மூத்த தயாரிப்பாளர் சி கல்யாண்.
No comments:
Post a Comment