360 டிகிரியிலும் சூறாவளி காற்றை போல சுழன்று பந்தை தடுத்து நிறுத்தும் திறன் கொண்ட 'ஜான்டி ரோட்ஸ்', 'டூ மூவிபஃஃப்ஸ்' மற்றும் 'அக்ராஸ் பிலிம்ஸ்' தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சுதர் இயக்கி வரும் 'திட்டம் போட்டு திருடுற கூட்டம்' படத்தின் படப்பிடிப்பில் ஆர்வத்தோடு கலந்து கொண்டு, கலைஞர்களை உற்சாகப்படுத்தினார். கயல் சந்திரன் மற்றும் சாட்னா டைட்டஸ் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் இந்த 'திட்டம் போட்டு திருடுற கூட்டம்' படத்தின் படப்பிடிப்பானது, சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு பிரம்மாண்ட கிரிக்கெட் அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்று இருந்த பல அரிய பொக்கிஷங்களான விருதுகள், கேடயங்கள், முன்னணி கிரிக்கெட் வீரர்கள் கையொப்பம் இட்ட மட்டைகள் - பந்துகள், வீரர்களின் அரிய புகைப்படங்கள் ஆகியவற்றை காண வந்த தென் ஆபிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைச் சிறந்த ஆட்டக்காரரான 'ஜான்டி ரோட்ஸ்', அங்கு நடைபெற்று கொண்டிருந்த 'திட்டம் போட்டு திருடுற கூட்டம்' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு, படக்குழுவினரோடு உற்சாகமாக கலந்து பேசினார். இந்த பிரமாண்ட கிரிக்கெட் அருங்காட்சியகத்தில் படப்பிடிப்பை நடத்தி வரும் 'திட்டம் போட்டு திருடுற கூட்டம்' படக்குழுவினரின் அர்ப்பணிப்பை பார்த்து வியந்த ஜான்டி ரோட்ஸ், அவர்களை வெகுவாக பாராட்டியதோடு, தனது வாழ்த்துக்களையும் அவர்களுக்கு தெரிவித்தார்.
"அடிப்படையில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வீரரான எனக்கு, கிரிக்கெட் தான் உலகம். அந்த கிரிக்கெட் விளையாட்டை பெருமை படுத்தும் விதத்தில் நான் ஆரம்பித்த இந்த கிரிக்கெட் அருங்காட்சியகத்துக்கு ஜான்டி ரோட்ஸ் வருகை தந்தது, எங்கள் ஒட்டுமொத்த 'திட்டம் போட்டு திருடுற கூட்டம்' படக்குழுவினருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. எப்படி ஒரு தமிழ் திரைப்படம் உருவாக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும், என்கின்ற ஆர்வத்தை கொண்டவர் ஜான்டி ரோட்ஸ். அவர் எங்களின் 'திட்டம் போட்டு திருடுற கூட்டம்' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு எங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தது, உண்மையாகவே பெருமையாக இருக்கிறது..." என்கிறார் 'திட்டம் போட்டு திருடுற கூட்டம்' படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ஜெ.கே.மஹேந்திரா. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் ஜூனியர் பிரிவுக்காக விளையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவிற்கும், கிரிக்கெட்டிற்கும் எப்போதுமே ஒரு இணை பிரியா அன்பும், ஒற்றுமையும் இருந்து வருகிறது. அதனால் தான் பிரபல கிரிக்கெட் வீரர்கள் பலர் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது 'ஜான்டி ரோட்ஸும்' தமிழ் சினிமா மீது ஆர்வம் காட்டி வருவது, தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது...
No comments:
Post a Comment