Tuesday, 30 August 2016

'தனி ஒருவன்' - ஒரு வருடம்.. கொண்டாடப்படுகிறது...ஜெயம் ரவி நெகிழ்ச்சி


ஏ ஜி எஸ் என்டர்டைன்மெண்ட் தயாரித்து, இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சுவாமி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான 'தனி ஒருவன்' திரைப்படம், 2015 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஒரு வருடத்தில் தனி ஒருவன் திரைப்படத்திற்காக ஜெயம் ரவிக்கு கிடைத்த விருதுகளும், பாராட்டுகளும் ஏராளம். அதுமட்டுமின்றி, ஜெயம் ரவியின் கமர்ஷியல் ஹீரோ என்னும் அந்தஸ்தை இந்த 'தனி ஒருவன்' திரைப்படம் மேலும் உயர்த்தி இருப்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

'தனி ஒருவன்' திரைப்படம் வெளியாகி ஒரு வருட காலமானாலும், அதற்காக நான் பெற்று வரும்  வாழ்த்து செய்திகளும், பாராட்டு மழைகளும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. 'தனி ஒருவன்' என்ற தலைப்பு வேண்டுமானால் ஒற்றைப்படையில் இருக்கலாம், ஆனால் எங்கள் படத்தில் பணிபுரிந்த ஒவ்வொருவரும் தங்களின் முழு உழைப்பையும்  தனி ஒருவன்  படத்திற்காக கொடுத்தது தான் இந்த மாபெரும் வெற்றிக்கு முழு காரணம். குறிப்பாக இந்த படத்தின் வெற்றிக்காக முழு ஆராய்ச்சியில் இறங்கி, படத்தின் கதை களத்தை வலுவாக்கிய இயக்குனர் மோகன் ராஜாவிற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். அதே சமயத்தில் எங்களின் தொழில் நுட்ப கலைஞர்கள், சக நடிகர் - நடிகைகள், எங்களின் தயாரிப்பாளர்கள் (ஏ ஜி எஸ் என்டர்டைன்மெண்ட்), நண்பர்கள், பெற்றோர்கள், ஊடக நண்பர்கள், என்னுடைய வாழ்க்கை துணைவி  ஆரத்தி மற்றும் என்னுடைய எல்லாமுமான ரசிகர்களுக்கும், பொதுவான சினிமா பார்வையாளர்களுக்கும் என்னுடைய நன்றிகளை இந்த தருணத்தில் தெரிவித்து கொள்கிறேன்.

"தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை பற்றி தற்போது பேசப்பட்டு வந்தாலும், நானும் என்னுடைய சகோதரர் மோகன் ராஜாவும்  மற்ற வேலைகளில் ஈடுபட்டு வருவதால், இரண்டாம் பாகத்தை பற்றி இன்னும் சரிவர பேசவில்லை. தனி ஒருவனின் மாபெரும் வெற்றியானது என்னுடைய பொறுப்புக்களையும், கடமைகளையும் அதிகரித்துவிட்டது. இனி நான் நடிக்கும் படங்கள் யாவும் தனி ஒருவன் தரத்தில் இருக்க வேண்டும் எனவும், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும் என்பதும்  தான் அந்த பொறுப்பு. தற்போதைக்கு இது தான் என்னுடைய தலையாய  குறிக்கோளாகவும், கடமையாகவும் இருந்து வருகிறது. நான் பெற்று வரும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும், ஆசிர்வாதங்களும் தான் அந்த குறிக்கோளுக்கு சிறந்த உரமாக இருக்கும் என பெரிதும் நம்புகிறேன்...' என்று நம்பிக்கையுடன்  கூறுகிறார் ஜெயம் ரவி.⁠⁠⁠⁠


No comments:

Post a Comment