Saturday, 23 April 2016

'உன்னோடு கா' திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது


கோடைக்கால விடுமுறை நாட்களில் அனைத்து குடும்பங்களையும் மகிழ்விக்க வர போகும் திரைப்படம் 'உன்னோடு கா'. அபிராமி ராமநாதன் கதை எழுதி தயாரித்திருக்கும் இந்த படத்தை புதுமுக இயக்குனர் RK இயக்கியுள்ளார். நேற்று இந்த திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா அபிராமி மெகா மாலில் பிரமாண்டமாக நடைப்பெற்றது. அபிராமி ராமநாதன் இந்த விழாவிற்கு தலைமை தாங்க, இயக்குனர் RK, ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன், இசை அமைப்பாளர் சத்யா, படத்தொகுப்பாளர் சேவியர் திலக் மற்றும் படத்தின் நடிகர்கள் ஆரி,மாயா, பிரபு, ஊர்வசி, பாலசரவணன், மிஷா கோஷல், பாடலாசிரியர்கள் மதன் கார்க்கி, விவேகா மற்றும் பார்வதி ஆகியோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். " ஒரு முழு நீள நகைச்சுவை திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற என் நீண்ட நாள் கனவு தற்போது 'உன்னோடு கா' திரைப்படத்தின் மூலமாக நிஜமாகி உள்ளது. பொதுவாக காதலை எதிர்க்கும் பெற்றோர்களை தான் நாம் இதுவரை திரையில் கண்டுள்ளோம். ஆனால் இந்த படத்தில், மகனின் காதலை சேர்த்து வைக்க போராடும் பெற்றோர்களை ரசிகர்கள் காண்பார்கள். இது தான் இந்த 'உன்னோடு கா' திரைப்படத்தின் கதை கரு. ஆனால் இந்த கதை என்னும் சிற்பத்தை அழகிய வடிவில் செதுக்கியது இயக்குனர்  RK தான். எங்களுடைய முதல் சந்திப்பிலேயே நான் RK வின் திறமையை பற்றி அறிந்து கொண்டேன். நான் அவர் மீது வைத்த நம்பிக்கை சற்றும் வீண் போகவில்லை" என்கிறார் படத்தின் தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன்.

'உன்னோடு கா' முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவை குடும்ப கலாட்டா திரைப்படமாக உருவாகியுள்ளது. இதை பற்றி இயக்குனர் RK கூறுகையில், " நான் ஒரு அறிமுக இயக்குனர் என்றாலும் எனக்கான முழு சுதந்திரத்தையும் கொடுத்தவர் தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் அவர்கள் தான். அந்த ஒரு காரணம் தான் என்னை இந்த படத்தில் முழு ஈடுபாடுடன் இறங்க செய்தது. நான் மட்டும் இல்லாமல் எங்களின்  ஒட்டு மொத்த குழுவும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட்டதால் தான் 'உன்னோடு கா' திரைப்படத்தை அழகாக உருவாக்க முடிந்தது." என்றார். மேலும் படத்தின் ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் கூறுகையில், "அனைத்து தரப்பு மக்களும் சமம் என்ற எண்ணம் கொண்டவர் அபிராமி ராமநாதன் அவர்கள். பத்து ரூபாய் டிக்கெட்டுக்குரிய இருக்கையும், 120 ரூபாய் டிக்கெட்டுக்குரிய இருக்கையும் சமமாக இருப்பதை  ஐயா ராமநாதன் அவர்களின் அபிராமி திரையரங்கில் மட்டும் தான் காண முடியும். மேலும், படத்தின் இசைக்கு ஏற்றவாறு நான் காட்சிகளை தத்ரூபமாக உருவாக்குவேன் என்று இசை அமைப்பாளர் சத்யாவிற்கு நான் கொடுத்த வாக்கு இப்போது நிறைவேறி உள்ளதை நினைத்து பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்" என்றார். மேலும்  இவர் மிக பெரிய ஹிட் படங்களான சென்னை 28, சரோஜா, சிவா மனசுல சக்தி, மங்காத்தா போன்ற திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்திற்கு இன்னும் அழகு சேர்ப்பது இளைய திலகம் பிரபு மற்றும் ஊர்வசியின் பங்கு தான் என்பதை உறுதியாக சொல்லலாம். "நான் பல படங்களில் அப்பா வேடத்தில்  நடித்திருந்தாலும், உன்னோடு கா திரைப்படத்தில் நடித்த அனுபவம் உண்மையாகவே மறக்க முடியாதது. படப்பிடிப்பு ஆரம்பமான முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரை நடந்த ஒவ்வொரு காட்சியும் நான் ரசித்து, அனுபவித்து நடித்ததாகும். அந்த அளவிற்கு இந்த திரைப்படம் என்னை கவர்ந்தது" என்கிறார் 'சின்ன தம்பி' கதாநாயகன். மேலும், இந்தியாவின் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவரான ஊர்வசி, " என் வாழ்க்கையில் மறக்க முடியாத இரண்டு சந்தோஷங்களை இந்த திரைப்படம் எனக்கு கொடுத்துள்ளது. ஒன்று அபிராமி ராமநாதன் சார் அவர்களின் திரைப்படத்தில் நடித்தது; மற்றொன்று வெகு நாட்களுக்கு பிறகு பிரபுவுடன் ஜோடி சேர்ந்து  நடித்தது" என்று நெஞ்சம் நெகிழ்ந்து கூறினார் நடிகை ஊர்வசி.

நெடுஞ்சாலை திரைப்படத்தில் இருந்து முற்றிலும் எதிர்மறையான கதாப்பாத்திரத்தில் ஆரி இந்த படத்தில் நடித்துள்ளார். "ராமநாதன் சார் படத்தில் நான் நடித்தது, எனக்கு கிடைத்த வரமாக தான் கருதுகிறேன். கண்டிப்பாக எங்கள் குழுவினர் அனைவரும் தங்களின் முழு உழைப்பை இந்த படத்திற்காக அளித்துள்ளனர். 'உன்னோடு கா' நிச்சயம் கோடைக்கால விடுமுறைக்கு ஏற்ற விருந்தாக அமையும் என நம்புகிறேன்!" என்றார் நடிகர் ஆரி.

மேலும் படத்தின் பாடல்கள் அனைத்தும் பிரத்யோகமாக டூப்பாடூ இசை தளத்தில் வெளியிடப்பட்டது." நாங்கள் முதன் முதலாக எங்கள் தளத்தில்  வெளியிடும் இசை ஆல்பம் 'உன்னோடு கா'. இந்த படத்தில் வரும் 'ஊதே ஊதே'  என்னும் பாடல் என் மனதிற்கு மிகவும் பிடித்தமான ஒன்று; 'ரா' என்னும் தமிழ் வார்த்தை 'தா' வாக இந்த பாடலில் உச்சரிக்கப்படுவது இந்த பாடலின் தனித்துவமான சிறப்பு. இந்த படத்தின் தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் அவர்கள் சினிமா தொழில்நுட்பத்தில் கை தேர்ந்தவர்; திரையரங்குகளில் முதன் முதலாக DTS டெக்னாலஜியை கொண்டு வந்த பெருமை ராமநாதன் அவர்களையே சேரும்" என்றார் டூப்பாடூவின் நிறுவுனர் மதன் கார்க்கி. விரைவில் இந்த நகைச்சுவை மிகுந்த குடும்ப கலாட்டாவை திரையில் எதிர்பார்க்கலாம்.

No comments:

Post a Comment