நடிகர் அஜித் குமாரின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் மக்களின் பாராட்டுகளை அதிகளவில் பெற்ற நடிகர் அருண் விஜய், தற்போது நடித்து கொண்டிருக்கும் திரைப்படம், 'ஈரம்' படப் புகழ் அறிவழகன் இயக்கி வரும் குற்றம் 23. ஆர்த்தி அருணின் 'இன் சினிமாஸ் என்டர்டைன்மெண்ட்' நிறுவனத்தோடு இணைந்து 'ரெதான் - தி சினிமா பீப்பல்' நிறுவனத்தின் உரிமையாளர் இந்தெர் குமார் தயாரித்து வரும் இந்த குற்றம் 23 திரைப்படமானது பல சுவாரசியங்களை உள்ளடக்கி இருக்கிறது.
"தரம் வாய்ந்த படங்களை ரசிகர்களுக்கு வழங்குவதே 'இன் சினிமாஸ் என்டர்டைன்மெண்ட்' தயாரிப்பு நிறுவனத்தின் முக்கிய நோக்கம். அதற்கு சான்றாக நாங்கள் எடுத்து வைத்திருக்கும் முதல் அடி தான் குற்றம் 23. பெரிய பட்ஜெட் படம் என்பதால் இதை என்னால் மட்டும் தனித்து செயல்பட்டு முடித்துவிட முடியாது. அப்படி சற்று தயக்கத்துடனும், குழப்பத்துடனும் இருந்த போது எனக்கு பக்கபலமாய் அமைந்தவர் தான் என்னுடைய நெருங்கிய நண்பர், 'ரெதான் - தி சினிமா பீப்பல்' நிறுவனத்தின் நிறுவனர் இந்தெர் குமார். என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு பிறகு எனக்கு பட வாய்ப்புகள் வந்திருந்தாலும், ஒரு தனித்துவமான கதைக்களம் கொண்ட திரைப்படத்தை தான் நான் தேடி கொண்டிருந்தேன். அந்த ஆசை எனக்கு இயக்குனர் அறிவழகன் சார் மூலம் இப்போது நிறைவேறி உள்ளது.."என்று நம்பிக்கையுடன் கூறினார் அருண் விஜய்.
குற்றம் 23 திரைப்படத்தில் முதல் முறையாக போலீஸ் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் அருண் விஜய், தன்னுடைய ரசிகரான போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரிடம் சில குறிப்புகளை பெற்று இருக்கிறார் என்பது மேலும் சுவாரசியம். "போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் போது மிக முக்கியமாக கற்று கொள்ள வேண்டியது அவர்கள் அடிக்கும் சல்யூட் தான். அதை கனகச்சிதமாக நான் கற்றுக்கொள்ள உதவியவர், என்னுடைய ரசிகர் ஒருவர் தான். போலீஸ் கான்ஸ்டபிளாக பணிபுரியும் அவர், வாட்ஸாப் மூலம் எனக்கு சில வீடியோக்களையும், ஒரு சில குறிப்புகளையும் வழங்கினார்.." என்று கூறினார் குற்றம் 23 படத்தின் கதாநாயகன் அருண் விஜய்.
பிரபல கதாசிரியரான ராஜேஷ் குமாரின் நாவலை ஒட்டி அமைந்திருக்கும் குற்றம் 23 திரைப்படமானது. இதுவரை எவரும் கண்டிராத மெடிக்கோ - க்ரைம் - திரில்லர் படமாக இருக்கும் என்கிறார் குற்றம் 23 படத்தின் இயக்குனர் அறிவழகன். "ரசிகர்களுக்கு புதுமையை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாகிய திரைப்படம் தான் குற்றம் 23. எப்படி மற்ற சராசரியான திகில் படத்தில் இருந்தும், விளையாட்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படங்களில் இருந்தும் நான் இயக்கிய ஈரம் மற்றும் வல்லினம் படங்கள் தனித்து விளங்கியதோ, அதே போல் குற்றம் 23 திரைப்படமும் மற்ற மெடிக்கல் - க்ரைம் - திரில்லர் படங்களில் இருந்து தனித்து விளங்கும். அருண் விஜயை முற்றிலும் வேறொரு கோணத்தில் கொண்டு செல்ல இருக்கும் திரைப்படமாக குற்றம் 23 அமையும் என்பதை நான் உறுதியாக சொல்கிறேன். சமூதாயத்தோடு ஒட்டி இருக்கும் ஒரு மெசேஜை, இந்த குற்றம் திரைப்படத்தின் மூலமாக ரசிகர்கள் உணருவர்..." என்று கூறினார் குற்றம் 23 படத்தின் இயக்குனர் அறிவழகன். இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் குற்றம் 23 திரைப்படமானது விரைவில் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டுச் செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
No comments:
Post a Comment