கன்னியாகுமரியில் 3 வயது குழந்தையை சிறையிலடைக்க உத்தரவு பிறப்பித்த நீதிபதி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேரில் ஆஜராகினார்.மதுரை விளாச்சேரியைச் சேர்ந்த மேரி என்பவர் தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவில், தனது கணவர், 3வயது குழந்தை மற்றும் தங்கை, தங்கையின் கணவரை காவல்துறையினர் கடந்த 21ஆம் தேதி அழைத்துச்சென்றதாக கூறியுள்ளார். விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அவர்களை, அதன் பின் காணவில்லை என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.விசாரணையில் சம்பந்தப்பட்ட 4 பேர் மீதும், கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. அவர்கள் அனைவரையும் நீதிமன்ற காவலில் வைக்க குளித்துறை முதலாவது நீதித்துறை நடுவர் உத்தரவிட்டதால், 3 வயது குழந்தையும் சிறையிலடைக்கப்பட்டது.அந்த உத்தரவு குறித்து விளக்கமளிக்க நேரில் ஆஜராகி நீதிபதி சண்முகராஜிடம், தாய் சிறைக்கு வெளியில் இருக்கும் போது குழந்தையை ஏன் சிறையிலடைக்கப்பட்டது என கேள்வி எழுப்பப்பட்டது. விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக அளிக்கவும் நீதிபதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும், இந்த வழக்கில் ஆவணங்களில் திருத்தம் செய்தது தொடர்பாக மார்த்தாண்டம் காவல்துறை ஆய்வாளர் முத்துராஜ் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேரி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment