வழக்கறிஞர் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தங்களை வாபஸ் பெற வலியுறுத்தி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வழக்கறிஞர்கள் போராட்டத்தால் சென்னை பாரிமுனை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றம் வெளியே ஆவின் நுழைவுவாயிலில் 1000-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக ஊர்வலமாக சென்று வழக்கறிஞர்கள் வழக்கறிஞர் சட்ட விதி திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கோஷமிட்டனர்.
வழக்கறிஞர்கள் போராட்டத்தை முன்னிட்டு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றியும் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஆவின் நுழைவுவாயில் அருகே குழுமியிருந்த வழக்கறிஞர்கள் போலீஸார் தடுப்பை மீறியும் உயர் நீதிமன்றத்துக்குள் நுழைய முற்பட்டனர். இதனால் போலீஸாருடன் வாக்குவாதம் நடைபெற்றது. தொடர்ந்து வழக்கறிஞர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
நீதித்துறைக்கு எதிராக செயல்பட்டதாக கூறி 126 வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்து இந்திய பார் கவுன்சில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு நிர்வாகிகள் திருமலைராஜன், சிவசுப்பிரமணியன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கச் செயலர் அறிவழகன், உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் நளினி உள்ளிட்ட 126 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய பார் கவுன்சில் அறிவித்துள்ளது.
ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் வழக்கறிஞர்கள் மீது உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களே நடவடிக்கை எடுக்கும் வகையில் வழக்கறிஞர் சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு அமலுக்கும் வந்துள்ளது.
வழக்கறிஞர் சட்டம் 1961, பிரிவு 14 ஏ, பி, சி, டி ஆகியவற்றில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய திருத்தங்களின்படி, தவறு செய்யும் அல்லது மது அருந்தி ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் வழக்கறிஞர்கள் மீது நீதிமன்றங்களே நேரடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும்.
நீதிபதியின் பெயரைக் கூறி வழக்கறிஞர் பணம் வாங்கினார் என புகார் அளித்தால் அந்த வழக்கறிஞரை நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்யும். உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்ற வளாகங்களில் வழக்கறிஞர்கள் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை உள்ளிட்ட நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
No comments:
Post a Comment