Monday 14 December 2015

ராக்கெட் வடிவமைப்பில் பங்கேற்க ஒப்பந்தம் செய்துள்ள தமிழக நிறுவனம்!





இந்திய ராக்கெட் வடிவமைப்பில் பங்கேற்க ஒப்பந்தம்
செய்துள்ள தமிழக நிறுவனம்!

 ஃபோம் தயாரிப்புகளில் 1999 முதல் நம்பகமான பெயர் பெற்று முன்னணி வகிக்கும் ஸ்ரீராம் போம்ஸ் நிறுவனம், தமிழ்நாடு, கேரளா அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளுக்கு ஃபோம் வழங்கி வரும் நிறுவனமாகும்.

இந்த  ஸ்ரீராம் ஃபோம்ஸ் நிறுவனம் 2011-ல்  இஸ்ரோ எனப்படும் ISRO-வின், அதாவது இந்திய விண்வெளி ஆராய்ச்சி  நிறுவனத்தின் அங்கமான திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் (VSSC)  ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

அதன் படி இந்தியாவில்  வடிவமைத்து உருவாக்கி ஏவப்படும் பிஎஸ் எல்வி, ஜி எஸ் எல்வி ராக்கெட்டுகளுக்குள் இருக்கும் க்ரையோ ஜெனிக் என்ஜின் பகுதிக்குள் வெப்பத்தை பராமரிக்க உதவும் சாதனங்களை தயாரித்து வழங்கும். இவை பாலி யுரித்தேன் என்கிற மூலப் பொருள் கொண்டு உருவாக்கப் படுபவை.ஏற்கெனவே செய்துள்ள அந்த ஒப்பந்தத்தின்படி ராக்கெட் உள்கட்டமைப்பில் இருக்கும் இந்த ஒரு சாதனத்தின் முதல்கட்ட ஒப்படைப்பு விழா  சென்னை மணலி அருகே  உள்ள பெரியமாத்தூரில் நேற்று 12. 12. 2015-ல் நடைபெற்றது.


ஸ்ரீராம் ஃபோம்ஸ் (பி) லிட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு.ப.முத்துக்குமார் ஒப்படைத்து வழங்க  திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி  மையத்தின் இயக்குநர் டாக்டர் கே.சிவன் பெற்றுக் கொண்டார்.

விழாவில்அனைவரையும்  வரவேற்றுப் பேசிய ஸ்ரீராம் ஃபோம்ஸ் நிர்வாக இயக்குநர் ப.முத்துக்குமார் தன் உரையில் 

''.டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் என்றால் ராக்கெட் நினைவு வரும்.  கலாம் அவர்களையும் ராக்கெட்டையும் பிரித்துப் பார்க்க முடியாது.அவர் பலருக்கு ஊக்கமும் தூண்டுதலுமாக இருந்து முன்னேற்றம் கொடுத்தவர். இங்கே விழாவில் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்துள்ள டாக்டர் கே:சிவன் அவர்கள்  திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி  மையத்தின் இயக்குநராக பல சாதனைகளைச் செய்திருப்பவர்.  டாக்டர் அப்துல்கலாம் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்,அவருடன் இணைந்து பல பணிகளைச் செய்தவர்.திருவனந்தபுரம் விண்வெளி ஆராய்ச்சி  மையத்தின் இயக்குநராக  அவரது பங்களிப்பு பெரிய அளவிலானது, பெருமைக்குரியது.

இங்கே நிறைய பேர் இருக்கிறீர்கள்.கலாம் அவர்களின் தொடர்ச்சியாக அவர் வழியில் இந்தக் கூட்டத்திலிருந்து இன்னொரு அப்துல்கலாம் வர வேண்டும். அவரது கனவும் லட்சியமும் நம்மை வழிநடத்திச் செல்லும் . நமது தேசத்துக்கான  இந்தப் பெருமை மிகுந்த பயணத்தில் பங்கேற்பதில் ஸ்ரீராம் ஃபோம்ஸ் நிறுவனம் பெருமை கொள்கிறது" என்றார்.

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி  மையத்தின் இயக்குநர் டாக்டர் கே:சிவன் பேசும்போது 
''இந்த விழாவில் கலந்து கொண்டதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஸ்ரீராம் ஃபோம்ஸ் நிறுவனம் சக்தி வாய்ந்த ஊழியர் குழுவைக் கொண்டுள்ளது. இவர்கள் ராக்கெட் வடிவமைப்புப் ப ணியில் தொடர்ந்து இணைந்து பங்களிப்பு செய்ய வேண்டும். அதற்கான தகுதியோடுதான் இந்த நிறுவனம் வளர்ந்திருக்கிறது. அதற்குரிய நம்பிக்கையைப் பெற்றுள்ளது. இந்த கூட்டுறவு தொடர வேண்டும் 'மேக் இன் இண்டியா' என்கிற குறிக்கோளுக்கு ஒரு சிறந்த உதாரணமாக இந்நிகழ்வு இருக்கும். '' என்றார். 

விழாவில் ஸ்ரீராம் ஃபோம்ஸ் பொது மேலாளர் பிரபுராமும் பேசினார்.  ஸ்ரீராம் ஃபோம்ஸ் (பி) லிட் நிறுவனத்தின் ஊழியர்களும் விண்வெளி ஆராய்ச்சி  மையத்தில் பணிபுரிபவர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

இந்திய ராக்கெட் வடிவமைப்பில் இப்படிப் பங்கேற்க இந்தியாவின் பல  முன்னணி நிறுவனங்களும் போட்டியிட்ட நிலையில் நம் தமிழ்நாட்டு நிறுவனம்  தகுதி பெற்றுத் தரமுத்திரை பெற்றுள்ளது  என்பது நம் தமிழகத்துக்குப் பெருமை எனலாம்.

No comments:

Post a Comment