Tuesday 22 December 2015

Medical camps for flood relief conducted by the Jain Society





வெள்ளம் பாதித்த சென்னை மக்களுக்கு   ‘பகவான் மஹாவீர் ஜெயின் சங்கம் ‘ நடத்திய வெள்ள நிவாரண மருத்துவ முகாம்!
சமீபத்தில் வந்த பெருமழையும் வெள்ளமும் எத்தனையோ அழிவுகளைக் கொடுத்திருந்தாலும் அவை சில நல்ல விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளன.
இந்த கனமழை நீர் போகும்பாதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களைச் சிந்திக்க வைத்துள்ளது..மாநிலங்கள் மதங்கள் கடந்து மக்களை இணைத்துள்ளது. ஒருவருக்கொருவர் ஆதரவுக் கரம் நீட்டவைத்துள்ளது. அதே போல பல சங்கங்களைக்கூட  இணைத்துள்ளது.
ஸ்ரீஜெயின் மஹாசங்க்,  தமிழ்நாடு ஜெயின் மகாமண்டல்,  ஜெயின்டாக்டர்கள் சங்கம். ஜிட்டோ, மஹாவீர் இண்டர் நேஷனல், ராஜஸ்தான் இளைஞர்கள் சங்கம் ,ஸ்ரீமுனிசுவரத் சுவாமி ஜெயின் நவகிரக ஆலயம் என்கிற பல்வேறு ஜெயின் சங்கங்களை ஒன்றிணைந்து ‘பகவான் மஹாவீர் ஜெயின் சங்கம்’ என  ஒரே குடைக்குள் இணைத்துள்ளது. ‘பகவான் மஹாவீர் ஜெயின் சங்கம்’ என்கிற  பெயரில் ஒன்றானதும்  இச்சங்கத்தினர், கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் மருத்துவ முகாம் என்று உதவிப் பணிகளில் இறங்கியுள்ளனர்.
உதவிப் பணியின் முதல் நாளிலேயே சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் மட்டும் 20ஆயிரம்  பேருக்கு உணவு உதவிகள் வழங்கியுள்ளனர்.  வெள்ளம் வந்த இரண்டாம் நாளிலிருந்தே  இதை விரிவாக்கி சென்னையில் சுமார் இரண்டரை லட்சம் பேருக்கு உணவு ,உடைகள் என்று உதவிகள் செய்து வந்துள்ளனர்.
இதற்காக’பகவான் மஹாவீர் ஜெயின் சங்கம்’ , வியாசர்பாடி, புதுப் பேட்டை, புளியந்தோப்பு, முடிச்சூர், மண்ணடி, சூளைமேடு போன்ற பல பகுதிகளில் உதவிப் பணிகளைச்  செய்துள்ளனர்.
இதுவரை பாதிக்கப் பட்டவர்களின் வீடு தேடி உணவு, உடைகள்,  பாத்திரங்கள், அத்தியாவசிய பொருள்கள் என்று வழங்கியவர்கள், மழைக்குப் பின் அமைதியாக இருக்கவில்லை. வெள்ளம் வடிந்த பின்னும் வெறுமனே இருக்கவில்லை.
இப்போது மக்களுக்குத் தேவையானது  நோய்த் தொற்று ஏற்படாமல் இருப்பதே என்பதை உணர்ந்து  நோய்த்  தடுப்புக்கான மருத்துவ உதவிகளைச் செய்து ‘வெள்ள நிவாரண மருத்துவ முகாம்’ நடத்தி வருகிறார்கள். ஜெயின் டாக்டர்கள் சங்கம் ,பகவான் மஹாவீர் கண் மருத்துவ மனை, ஸ்ரீஆதிநாத்  ஜெயின் ஸ்வேதாம்பர் மருத்துவ மனை போன்றவற்றின் ஆதரவோடு
இந்த மெகா முகாமை முதலில் புழலில் தொடங்கினார்கள் .தொடர்ந்து வாராவாரம் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த  மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறார்கள்.
இன்று கிழக்கு கடற்கரை சாலையில்  கிருஷ்ண கரனை பகுதியில் முனிசுவரத் சுவாமி ஜெயின் நவக்கிரக கோயிலில் இந்த இலவச மருத்துவ முகாம் மற்றும் கண்சிகிச்சை முகாம்களை நடத்தி உள்ளனர். இதில் 20 க்கும் மேற்பட்ட டாக்டர்கள் அடங்கிய மருத்துவக் குழுக்கள் சேவை செய்தனர்.
பொது மருத்துவம், ரத்தஅழுத்தம், ஈசிஜி, , நீரிழிவு நோய்க்கானவை போன்ற அனைத்து சோதனைகளும் இலவசமாக செய்யப்பட்டன. வெள்ளப் பாதிப்பு சார்ந்த நோய்களுக்கு உரிய ஊசிகள் போடப்பட்டு மருந்துகள் வழங்கப் பட்டன.
கண் சிகிச்சை முகாமில் மருந்துகள் ,கண்ணாடிகள் வழங்கப் பட்டன. சிலருக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது..
‘பகவான் மஹாவீர் ஜெயின் சங்கம்’ சங்கத்தின் தலைவர் ரமேஷ்முத்தா இதற்காக விரிவான  ஏற்பாடுகளைச் செய்திருந்தார். ‘மகாவீர் இண்டர் நேஷனல் சென்னை மெட்ரோ’ வைச்சேர்ந்த நரேந்தர் ஸ்ரீஸ்ரீமால் கண் மருத்துவ முகாமிற்கு உறுதுணையாகச்   செயல்பட்டார்.
ஊடக ஒருங்கிணைப்பு பணிகளை ஜியாந்த்சந்த் கோத்தாரி செய்திருந்தார்.
மனிதநேயம் என்பது  மதம், மாநிலம் ,மொழி எல்லாமும்  கடந்த ஒன்று   என்று தான்  இப்பணிகள் சொல்ல வைக்கின்றன.



No comments:

Post a Comment