Tuesday 7 February 2017

தயவு செய்து தியேட்டர் அல்லாத மற்ற எங்கும் எந்த படத்தையும் பார்க்க வேண்டாம்:ஹரி

நம்முடைய இளைஞர்கள்தான் நம்முடைய மிகப்பெரிய பலம். எழுச்சியோடு, ஒரு மாபெரும் புரட்சி செய்து அதை நிரூபித்தீர்கள். உலகத்தில் தமிழ்நாட்டு இளைஞர்களை பாராட்டாத ஆளே கிடையாது.
திருட்டு டி.வி.டி-யிலோ, சட்டவிரோதமான இணையதளங்களிலோ படம் பார்ப்பது உங்களுக்கு  பிடிக்காத ஒரு விஷயம். நீங்களே அதை சரியாக உணர்ந்து விட்டால் அதைச் செய்வது உங்களுக்கு பிடிக்காது.
அனைத்து இளைஞர்களுமே பார்ப்பதாக, நான் குற்றம் சொல்லவில்லை, ஏதோ ஒரு சாரார் மட்டுமே அப்படி பார்க்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் அறிவுறுத்த வேண்டும்.
சினிமா என்பது ஒரு தொழில் மட்டுமல்ல ஒரு கலை. தயாரிப்பாளர் கூட ஒரு கலைஞன் தான்.  
சினிமாவின் வரலாற்றில் எத்தனை பேர் சம்பாதித்தார்கள் எத்தனை பேர் விட்டுச் சென்றார்கள் என்று பார்த்தால், விட்டுச் சென்றவர்கள் தான் அதிகம்.

அதனால் தயாரிப்பாளருக்கு பணம் போய் சேர வேண்டும் என்றால், கண்டிப்பாக தியேட்டரில் படம் பார்த்தால் மட்டுமே போய் சேரும். ஒரு படத்தை மொத்தமாகவோ காட்சிகளாகவோ விமர்சனம் செய்கின்ற உரிமை பார்வையாளர்களுக்கு உண்டு. ஆனால் அதை தியேட்டரில் படம் பார்த்துவிட்டு செய்யுங்கள். தவறான வழியில் அல்ல. யாராவது தவறு செய்தால், அவர்களுக்கு அறிவுறுத்துங்கள். இது என்னுடைய வேண்டுகோள்.
அடுத்து நீங்கள் ஏதோ இணையதளம் பற்றி சொன்னீர்கள், அதைப்பற்றி எனக்கு முழுதாக தெரியாது. ஆனால், அந்த இணையதளம் சம்மந்தப்பட்டவர்களுக்கு, நான் வைக்கின்ற வேண்டுகோள் என்னவென்றால்,

உங்களுக்கு யார் மீது கோபம்? எதற்க்காக ஒரு படத்தை இப்படி செய்கிறீர்கள். அதனால் உங்களுக்கு என்ன கிடைக்க போகிறது? ஒன்றும் இல்லை. நீங்கள் ஒரு நாள் உட்கார்ந்து ஒரு பத்து நிமிடம் யோசித்து பாருங்கள். நாம் செய்வது சரியா தவறா என்று. ஐயோ இந்த பாவத்தை எதற்கு செய்கிறோம் என்று கண்டிப்பாக தோன்றும். ஒரு தயாரிப்பாளர் மூலமாக, முன்னூறு தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் ஆயிரம் பேர் பயனடைகிறார்கள். அந்த தயாரிப்பாளரை நசுக்கி விட்டால், அவர் அடுத்து படம் தயாரிக்கவே மாட்டார். சினிமா துறையே நசித்து விடும்.
ஒரு தொழில் துறையை நசுக்கி விட்டு நீங்கள் எதை சாதிக்கப் போகிறீர்கள்?

சினிமா ஒரு தொழில். அரசியல் அல்ல. இந்த தொழிலில் உங்கள் அனைவரையும் சந்தோஷப் படுத்துவதற்காக நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். யாருமே நூறு சதவிகிதம் ஜெயிப்பதும் இல்லை. நூறு சதவிகிதம் சம்பாதிப்பதும் இல்லை. அதனால் இப்படி ஒரு சூழலில், பெரிய ஆபத்தில் நாங்கள் இருக்கும் போது, எங்களை நீங்கள் ஏன் கஷ்டப்படுத்துகிறீர்கள்?
தயவு செய்து எல்லாவற்றையும் தூக்கிப் போடுங்கள். இனிமேல் இந்த வேலையை செய்ய மாட்டோம் என்று உங்கள் டிவிட்ட்ரில் பதிவு செய்யுங்கள். உலகமே உங்களை கைதட்டிப் பாராட்டும். தயவு செய்து எங்களை அழிக்காதீர்கள்.

18 முதல் 21 மணி நேரம் வேலை செய்கின்ற தொழில் துறை எங்காவது இருக்கிறதா? அப்படி இருந்தால் தொழிலாளர்களை ஏன் கஷ்டப்படுத்துகிறீர்கள் என்று தொழிலாளர் நலத்துறை உடனே நோட்டீஸ் அனுப்பும். ஆனால் கலைஞர்களாகிய நாங்கள் ஒரு விஷயத்தை உருவாக்குவதற்கு கஷ்டப்படுகிறோம் அதிலும் விரும்பியே இந்த வேலையை செய்கிறோமென்று தெரிந்த காரணத்தால் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவதில்லை.

நாங்கள் முதலாளிகள் இல்லை. உங்களுக்கு நல்ல உணவைத் தரவேண்டுமென்று சமையல் செய்பவர்கள், நீங்கள் எங்கள் தலையில் கல்லைத் தூக்கி போட்டால், நாங்கள் எப்படி நல்ல சமையல் செய்து தர முடியும்?
எங்களுடைய படம் தவறான வழியில் பார்க்கப்பட்டால், நாங்கள் எவ்வளவு வேதனை படுவோம் என்று எண்ணிப்பாருங்கள்.
எல்லோரும் மனிதர்கள் தான். எல்லோருக்குமே காயம்பட்டால் சிவப்பு இரத்தம் தான். உங்களுக்கு பச்சை இரத்தம் வருமென்று சொன்னால் இந்த தவறை செய்யுங்கள்.

உங்களுடைய அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, நண்பர்கள் என எல்லோருடைய தொழிலும் நன்றாக இருக்க வேண்டுமென்றால், அடுத்தவர்கள் செய்யும் தொழிலும் நன்றாக இருக்க வேண்டும், அதை நீங்கள் கஷ்டப்படுத்தக்கூடாது.
ஒரு ஹீரோவை வைத்து போஸ்டர் ஒட்டினால், தியேட்டரில் அதே ஹீரோ நடித்த படத்தை தான் மக்களுக்கு காட்டுகிறோம், வேறு ஹீரோ படத்தை காட்டி ஏமாற்றுவதில்லை.

நீங்கள் தயவு செய்து சிந்தித்து பார்த்து உங்கள் தவறை நிறுத்திக்கொள்ளுங்கள். வேறொரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உலகமே நம் தமிழ் சமூகத்தை திரும்பிப்பார்த்து வியக்கும் அளவிற்கு, நாம் ஏற்கனவே ஒரு புரட்சியை உருவாக்கி இருக்கிறோம். இதே மாதிரியான உயர்வுட­னேயே நாம் இருக்க வேண்டும். யாரும் நம்மை பார்த்து கேவலமாக பேசும் நிலைக்கு தள்ளப்பட்டு விடக்கூடாது.

அன்புடன் 
ஹரி

No comments:

Post a Comment