Saturday 23 July 2016

மாயமான விமானத்தைத் தேடும் 20க்கும் மேற்பட்ட கப்பல்கள்.. ஒரு தடயமும் கிடைக்கவில்லை!


சென்னை தாம்பரம் விமானப்படைத் தளத்திலிருந்து அந்தமானுக்குப் புறப்பட்டு நடு வழியில் வங்கக் கடலுக்கு மேலே காணாமல் போய் விட்ட விமானப்படைக்குச் சொந்தமான ஏ.என். 32 ரக விமானத்தைக் கண்டுபிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்ட கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள், கடலோரப் பாதுகாப்புப் படையின் படகுகள் என பல முனைகளில் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. 3வது நாளான இன்றும் தேடுதல் வேட்டை தொடருகிறது. ஆனால் இதுவரை கடல் பகுதியில் எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை. கன்னியாகுமரி கடல் பகுதி முதல் சென்னை வரை கடலோரம் முழுவதும் தேடுதல் வேட்டையில் கடற்படையும், கடலோரக் காவல் படையும், விமானப்படையும் இறங்கியுள்ளன. காணாமல் போய் விட்ட விமானத்தில், விமானிகள், கப்பற்படை, விமானப்படை, கடலோர காவல்படை, ராணுவப்படை ஆகியவற்றை சேர்ந்த 21 பேரும், அவர்களில் சிலரின் குடும்பத்தினர் 8 பேரும் என மொத்தம் 29 பேர் இருந்தனர். புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம், தாம்பரத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இப்படி தொடர்பு துண்டிக்கப்பட்ட போது காணாமல் போன விமானம் சென்னைக்கு கிழக்கே சுமார் 300கிமீ தொலைவில் வங்கக்கடல் மீது 23 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துக் கொண்டிருந்தது. தேடுதல் பணியில் கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் உட்பட 13 போர்க்கப்பல்கள், கடலோர பாதுகாப்பு படையின் 4 ரோந்து கப்பல்கள், விமானப்படை, கடற்படை ஆகியவற்றின் 5 விமானங்கள் மாயமாகி விட்ட விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. நேற்று அதிகாலை முதல் அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளியில் இருந்து மேலும் ஒரு போர் விமானம் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது. இதேபோல் தேடும் கப்பல்களின் எண்ணிக்கை நேற்று அதிகரிக்கப்பட்டதுடன், ஹெலிகாப்டர்களும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. காணாமல் போன விமானம் சென்னையில் இருந்து கிழக்கே 150 கடல் மைல் சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் செல்லும் போது தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அந்தப் பகுதிகளில் தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல செயற்கைக் கோள்களின் உதவியுடனும் தேடுதல்வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்காக இஸ்ரோவின் உதவியும் நாடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment