Sunday 31 July 2016

நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் கோபி நாயனார்


ஜெயம் ரவியின் 'தனி ஒருவன்', இயக்குனர் விக்னேஷ் சிவனின் 'நானும் ரௌடி தான்', சிலம்பரசனின் 'இது நம்ம ஆளு' என தொடர்ந்து மெகா ஹிட் படங்களை கொடுத்து வரும் நயன்தாரா,  தற்போது 'கே ஜெ ஆர் ஸ்டுடியோஸ்' சார்பில் கோட்பாடி ஜெ ராஜேஷ் தயாரித்து ,  புதுமுக  இயக்குனர் கோபி நாயனார் இயக்கி வரும் பெயர் சூட்டப்படாத திரைப்படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்தில் நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடிப்பது குறிப்பிடத்தக்கது.  காக்கா முட்டை படம் மூலம் எல்லா ரசிகர்களின் உள்ளத்திலும் பதிந்த 'சின்ன காக்க முட்டை' ரமேஷ் மற்றும் 'பெரிய காக்க முட்டை' விக்னேஷ் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களிலும், சுன்னு லக்ஷ்மி மற்றும் ராம்ஸ்  ஏனைய கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகின்றனர். ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் லால்குடி இளையராஜா, ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் ஆகியோர் இந்த பெயர் சூட்டப்படாத படத்தில் பணியாற்றுவது  மேலும் சிறப்பு. வலுவான கதை களத்தை கொண்டு உருவாகி வரும் இந்த படத்தின் இசையமைப்பாளரின் பெயரை விரைவில் படக்குழுவினர் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

"தண்ணீர் பிரச்சனை  நம் நாட்டு மக்களின் வாழ்க்கையில் தீர்க்க முடியாத ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்த கருத்தை மையமாக கொண்டு தான் நான் இந்த படத்தை இயக்கி வருகிறேன். இந்த படத்தின் கதையை கேட்ட அடுத்த கணமே  நயன்தாரா இதில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டார். எங்கள் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாங்கள் படமாக்கியிருக்கிறோம்.  சமூதாயத்தின் மீது அக்கறை கொண்டு உருவாக்கப்பட்டு வரும் இந்த படமானது ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களின் உள்ளங்களிலும்  ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என பெரிதும் நம்புகிறேன்.." என்கிறார் படத்தின் இயக்குனர் கோபி நாயனார்..

No comments:

Post a Comment