Monday 18 July 2016

மதுரையைக் கலக்கும் "டெர்ரர் மேன்" டிராபிக் ராமசாமி!

20ம் தேதி வரை இங்கேதான் இருப்பேன். முறைகேடுகள் அனைத்தையும் களையும் வரை இங்கிருந்து போக மாட்டேன் என்று பிரபல சமூக நல சேவகர் டிராபிக் ராமசாமி கூறியுள்ளதால் மதுரையில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது. சென்னையை மட்டுமே கலக்க வந்த டிராபிக் ராமசாமி இப்போது தமிழகம் முழுவதும் தனது அதிரடிக் கரங்களை வியாபிக்கத் தொடங்கி விட்டார். தற்போது மதுரைக்கு வந்துள்ள அவர் அங்கு அதிரடியாக செயல்பட்டு வருவதால் அதிமுகவினரும், காவல்துறையினரும் டென்ஷனாக காணப்படுகின்றனர். ஆனால் சட்ட ரீதியான பாதுகாப்புடன் பக்காவாக களம் இறங்கியுள்ள ராமசாமிக்கு எதிராக சுண்டு விரலைக் கூட அசைக்க முடியாது என்பதால் அதிமுகவினர்தான் செம காட்டமாக காணப்படுகின்றனர்.மதுரைக்கு வந்துள்ள டிராபிக் ராமசாமி அங்கு அனுமதியில்லாமல் ஓட்டப்பட்டு வரும் ஆட்டோக்களைப் பறிமுதல் செய்து அதிரடியை ஆரம்பித்தார். இதனால் ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆனால் சட்டரீதியாக முறைப்படி செயல்பட்ட டிராபிக் ராமசாமியுடன் ஒத்துழைத்து செயல்பட்டாக வேண்டிய நிலை போலீஸாருக்கு. இதனால் சட்டத்திற்குப் புறம்பாக ஓடிக் கொண்டுள்ள ஆட்டோக்களை போலீஸார் பறிமுதல் செய்ய நேரிட்டது. அடுத்து நேற்று தமுக்கம் மைதானத்திற்குப் போன டிராபிக் ராமசாமி அங்கு பெரிய சைஸில் கட்டப்பட்டிருந்த அதிமுக பேனரைப் பார்த்தார். உடனடியாக போலீஸார் விரைந்து வந்தனர். அவர்களிடம் இது சட்டத்திற்குப் புறம்பாக வைக்கப்பட்டுள்ளது. தூக்குங்கள் என்றார். உடனடியாக அதிமுகவினருக்குத் தகவலைச் சொன்னார்கள் போலீஸார். ஆனால் அதிமுகவினர் ஆடி அசைந்து வர ரொம்ப லேட்டானது. கோபம் கொண்ட ராமசாமி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் குதித்தார். அப்போது அங்கு வந்த அதிமுகவினர், ஏக வசனத்தில் ராமசாமியிடம் பேசி வாக்குவாதத்தில் இறங்கினர். ஆனால் போலீஸார் தலையிட்டு அதிமுகவினரை அடங்குமாறு பணித்தனர். வேறு வழியில்லாமல் அதிமுகவினர் தாங்கள் வைத்த பேனரை அப்புறப்படுத்தி கொண்டு சென்றனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராமசாமி, 20ம் தேதி வரை இங்கதான் இருப்பேன். எல்லா சட்டமீறல்களையும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கச் சொல்வேன். சட்டத்திற்குப் புறம்பாக, கோர்ட் உத்தரவுக்குப் புறம்பாக பேனர் வைக்க அனுமதித்துள்ளனர். இதற்காக கலெக்டர், கமிஷனர் ஆகியோர் மீது கேஸ் போடப் போகிறேன் என்றார் ராமசாமி.

No comments:

Post a Comment